நகரில் நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிய 120 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


நகரில் நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிய 120 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x

மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிய 120 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

மதுரை

மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிய 120 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

நம்பர் பிளேட் விதிமீறல்

மதுரையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் இல்லாமல், அரசு அறிவித்துள்ளபடி முறையான வாகன எண் எழுதாமலும், அதில் பெயர்கள் எழுதி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் துணை கமிஷனர் குமார் உத்தரவிட்டார்.

அதன்படி நகரில் கோரிப்பாளையம், தெப்பக்குளம், கீழவாசல், அவனியாபுரம், தெற்குவாசல், காளவாசல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 120 மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் உள்ளிட்ட விதி மீறலில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக பெரியார் பஸ் நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

அபராதம்

அங்கு போலீஸ் துணை கமிஷனர் குமார் வந்து அதனை ஆய்வு செய்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 120 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அதே இடத்தில் ஒரு சில வாகனங்களுக்கு நம்பர் பிளேட்டும் மாற்றி அமைக்கப்பட்டு, வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து போக்குவரத்து துணை கமிஷனர் குமார் கூறியதாவது:-

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம்பர் பிளேட் இல்லாமலும், அதில் நம்பரை பல்வேறு கோணங்களில் எழுதி இருந்த மோட்டார் சைக்கிள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி 2 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விதி மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவ்வாறு ஈடுபட்ட வாகன உரிமையாளர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தவிர கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் விதிமீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வாகன சோதனையில் போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், தங்கபாண்டி, தங்கமணி, கார்த்தி, ரமேஷ்குமார், சுரேஷ், கணேஷ்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story