ஆத்தூர் அருகே கோழிப்பண்ணையில் 1.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆத்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கிய 1.20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்குள்ள சில கோழிப்பண்ணைகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அவைகளை கோழிகளுக்கு இரையாக கொடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து சேலம் உணவு வழங்கல் துறை பறக்கும்படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ், குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமம் பகுதியில் திடீரென சோதனை செய்தனர். அப்போது, கந்தசாமிபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோழிப்பண்ணையில் சோதனை செய்த போது, அங்கு 1.20 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையின் உரிமையாளர் சுப்ரமணி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை
மேலும், பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி கோழிப்பண்ணைக்கு எப்படி வந்தது? ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.