1,200 மதுபாட்டில்கள்-200 லிட்டர் சாராயம் பறிமுதல்
1,200 மதுபாட்டில்கள்-200 லிட்டர் சாராயம் பறிமுதல்
சீர்காழி அருகே வாகனசோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுபாட்டில்கள் மற்றும் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் சாராய வியாபாரியை கைது செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதிகளில் புதுச்சேரி சாராயம், மதுபான பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை கூழையாரில் இருந்து தாண்டவன் குளம் செல்லும் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
1,200 மதுபாட்டில்கள் பறிமுதல்
அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் காரில் 27 பெட்டிகளில் 1,200 புதுச்சேரி மாநில மதுபாட்டில்களும், 200 லிட்டர் புதுச்சேரி சாராயமும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள், புதுச்சேரி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய வியாபாரி சியாளம் துரை (வயது56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.