நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 1,200 பேர் பங்கேற்க முடிவு
நாளை முதல் நடக்க உள்ள தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 1,200 பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
சேலம்,
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் இருசப்பமுருகன், மாவட்ட துணைத்தலைவர்கள் குமார், கணேசன் உள்பட கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் தள்ளுபடி செய்ததில் விதிமீறல் என்று கூறி பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி நாளை (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் 214 தொடக்க மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் இருந்து சுமார் 1,200 பணியாளர்கள் கலந்து கொள்வது என்றும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின்பேரில் கூட்டுறவுத்துறை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் ஆய்வு கூட்டங்களை புறக்கணித்து புள்ளி விவரங்களை வழங்குவது இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.