கார்த்திகை தீபத்திருவிழாவில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; டி.ஜி.பி. தகவல்


கார்த்திகை தீபத்திருவிழாவில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; டி.ஜி.பி. தகவல்
x

தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 8-ந்தேதி வரை 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கோவிலில் ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை

தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 8-ந்தேதி வரை 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கோவிலில் ஆய்வு செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்றும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நாளையும் நடக்கிறது. 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், மகா தீபத்தின் போது வி.ஐ.பி. அமரும் பகுதி குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் தீபத்திருவிழாவின் போது கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு மகாதீபத்தன்று திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீருடையற்ற உடையில்...

மேலும் அன்றைய தினம் 27 ஆயிரம் பஸ்களிலும், 12 ஆயிரம் கார்களில் இருந்தும், ரெயில் மூலமும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்காக 59 இடங்கள் மாவட்ட நிர்வாகத்தினால் கண்டறியப்பட்டு உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பை கருதி தற்போது இருந்தே வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இந்த மாவட்டத்தில் முன்பு வேலை பார்த்த அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அந்தந்த பகுதியை சேர்ந்த குற்ற தடுப்பு போலீசார் சீருடையற்ற உடையில் (சாதாரண உடை) மக்களோடு மக்களாக இருந்து சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண கூடிய சாப்ட்வேர் மூலம் கேமராக்களில் கண்காணிக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியுள்ள மக்களின் விவரங்கள் மற்றும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை வந்து தங்கியுள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

12 ஆயிரம் போலீசார்

இன்று முதல் 8-ந்தேதி வரை போலீஸ் பாதுகாப்பு திருவண்ணாமலையில் தொடரும். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இவ்விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் பரணி தீபத்திற்கும், மகா தீபத்திற்கும் எவ்வளவு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளார்களோ அதே அளவு பக்தர்கள் மட்டுமே இந்த ஆண்டும் அனுமதிக்க முடியும். கடந்த காலங்களில் இருப்பது போன்று இல்லாமல் இந்த ஆண்டு தேவையான அளவு எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே கோவிலுக்குள் மகா தீபத்தின் போது இருப்பார்கள். தேவையற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், கலெக்டர் முருகேஷ், வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உதவி கலெக்டர் மந்தாகினி, துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story