மாடு விடும் விழாவில் 121 காளைகள் பங்கேற்பு
லத்தேரி அருகே நடந்த மாடு விடும் விழாவில் 121 காளைகள் பங்கேற்றன. இதில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்.
மாடு விடும் விழா
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பனமடங்கி கிராமத்தில் நேற்று காளை விடும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஓடுபாதையின் இருபுறங்களிலும் சவுக்குக் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு கொண்டு வரப்பட்ட 125 மாடுகளில் 4 மாடுகள் திருப்பி அனுப்பப்பட்டன. 121 காளைகள் போட்டிகளில் பங்கேற்றன. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தாசில்தார் அ.கீதா, துயர்துடைப்பு தாசில்தார் ரமேஷ், கால்நடைத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் போட்டிகளை கண்காணித்தனர். காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் லத்தேரி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
34 பேர் காயம்
மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. அப்போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி ஓடுபாதையின் குறுக்கே நின்ற பார்வையாளர்களை மாடுகள் முட்ட தள்ளியது. இதில் 34 பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 4 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். 30 பேருக்குமுதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டது.
எச்சரிக்கை அறிவிப்புகளை மீறி பாதுகாப்பு தடுப்புகள் மீது ஏறி நின்றுகொண்டு இருந்த பார்வையாளர்கள் சிலர் தடுப்புகள் சரிந்து விழுந்து லேசான காயமடைந்தனர். ஓடுபாதையில் தவறி விழுந்து எழுந்து ஓடிய 3 மாடுகளுக்கு காயம் ஏற்பட்டது. விழா முடிவில் குறித்த தூரத்தை ஓடிக்கடந்த நேரத்தின் அடிப்படையில் பரிசுகள் அறிவிப்புடன் வழங்கப்பட்டன.
முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.60 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம், என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.