121 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்


121 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் 121 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

சிறப்பு மருத்துவ முகாம்

தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிற நிலையில் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 121 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் நடந்த மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் கலந்து கொண்டு பார்வையிட்டார். சிறப்பு மருத்துவ முகாம் குறித்து அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 25 முதல் 50 பேருக்கு காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெறுவது உண்டு. இந்த காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? என்பதை கவனிக்கிறோம். இந்த எண்ணிக்கையை கண்காணித்து ஒரு இடத்தில் அதிகமாக காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த இடத்தில் கூடுதலாக மருத்துவ முகாம் நடைபெறும்.

மருத்துவ குழு

காய்ச்சல் பாதிப்பில் சளி, இருமல் உள்ளதா?, வயிற்று போக்கு இருக்கிறதா? என ஆராயப்படும். இதில் சளி, இருமல், உடல் வலி இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அந்த மாதிரியை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அது வைரஸ் காய்ச்சலா? என்பது அதில் தெரியவரும். ஒரே தெரு அல்லது ஒரே வார்டு, ஒரே பள்ளியில் 3 பேருக்கு மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு வந்தால் அந்த பகுதியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் 13 வட்டாரங்களிலும், 2 நகராட்சிகளிலும் தினமும் மருத்துவ முகாம் நடைபெறும். இதில் டாக்டர்கள், செவிலியர்களுடன் நடமாடும் மருத்துவ குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொள்வார்கள். மேலும் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

காய்ச்சல் பரிசோதனை

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா?, மாணவர்கள் வருகை விவரம் கேட்டறிந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை என அதிகாரிகள் கூறினர். மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 4,510 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 பேருக்கு காய்ச்சல் பரிசோதனையும், 63 பேருக்கு சளி, இருமல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.


Next Story