ரூ.12.10 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.12.10 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேரிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேஷன் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே பயணிகள் வந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட ஏர்போர்ட் போலீசார், திருச்சி பெரியகடை வீதி கிளேதார் தெரு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்(வயது 32) மற்றும் சிவகங்கை மாவட்டம் சிதம்பரநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜீவன்(23) ஆகியோர் தங்கம் வைத்திருப்பதை அறிந்து, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தங்கம் பறிமுதல்
அப்போது அப்துல் ரகுமான் 150 கிராம் தங்கச்சங்கிலியும், ஜீவன் 70 கிராம் தங்க நகையும் வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த தங்க நகைகளுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத காரணத்தினால் அந்த தங்கத்தை ஏர்போர்ட் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.12.10 லட்சம் மதிப்பிலான 220 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்த நிலையில், தற்போது ஏர்போர்ட் போலீசார் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.