பூக்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் பூக்கள், காய்கறிகள், பழமரக்கன்றுகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையைசுற்றி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பூக்கள், காய்கறிகள், பழமரக்கன்றுகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையைசுற்றி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காய்கறி சாகுபடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-23-ம் ஆண்டுக்கு தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள், காய்கறிகள் மற்றும் உதிரிப்பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் மற்றும் விவசாய கருவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மானியம்
மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடிக்கு ஒரு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 195-ம், மா சாகுபடிக்கு ரூ.6 ஆயிரத்து 120-ம், கொய்யாவுக்கு ரூ.9 ஆயிரத்து 201-ம், பப்பாளிக்கு ரூ.18 ஆயிரத்து 497-ம், மாதுளைக்கு ரூ.11 ஆயிரத்து 520-ம், சப்போட்டாவுக்கு ரூ.10 ஆயிரத்து 896-ம், கத்தரி, மிளகாய், தக்காளி, குழித்தட்டு நாற்றுக்களுக்கு ரூ.20 ஆயிரமும், வெண்டைக்கு ரூ.10 ஆயிரமும், கொத்தமல்லிக்கு ரூ.12 ஆயிரமும், கறிவேப்பிலைக்கு ரூ.20 ஆயிரமும், வாழை சாகுபடியில் காய்கறி ஊடுபயிர் ரூ.10 ஆயிரமும், தென்னை சாகுபடியில் வாழை ஊடுபயிர் ரூ.26 ஆயிரத்து 250-ம், உதிரி பூக்கள் ரூ.16 ஆயிரமும் மானியம் வழங்கப்பட உள்ளது.
விவசாய கருவிகளுக்கு...
இதே போன்று விவசாய கருவிகளான ஒரு சிறிய தெளிப்பானுக்கு ரூ.3 ஆயிரத்து 100-ம், பெரிய தெளிப்பானுக்கு ரூ.3 ஆயிரத்து 800-ம், காய்கறி கூடைக்கு ரூ.3 ஆயிரத்து 750-ம், அலுமினியம் ஏணிக்கு ரூ.10 ஆயிரம், பாதுகாப்பான பழ அறுவடைக்கான வலைக்கு ரூ.250-ம், துல்லிய பண்ணையத்துக்கு ரூ.15 ஆயிரமும், வெங்காய சேமிப்பு கிடங்குக்கு ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், உழவர் சந்தையை சுற்றி உள்ள காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் ஊக்கத்தொகை ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
ஆவணங்கள்
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன்கார்டு நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் TNHORTNET மற்றும் உழவன் என்ன இணைய தளத்திலும் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.phpஎன்ற முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.