மணிவிழுந்தான் ஏரியில் 124 வகையான பறவைகள் கண்டுபிடிப்பு


தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஏரியில் 124 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சேலம்

தலைவாசல்:

பறவைகளின் புகலிடம்

தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஏரி தனியார் அமைப்புகளின் உதவியுடன் சீரமைக்கப்பட்டது. மேலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, மண் திட்டுகள் அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் மணிவிழுந்தான் ஏரி தற்போது பல்வேறு பறவை இனங்களின் புகலிடமாக மாறியுள்ளது.

இந்த ஏரியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் கூடு கட்டி, குஞ்சு பொறித்து வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக மண்கொத்தி, பொரி மண்கொத்தி, பட்டாணி உப்புக்கொத்தி, பவளக்கால் உள்ளான், ஆள்காட்டி, கதிர்க்குருவிகள், சின்னக்கீச்சான், நீலவால் பஞ்சுருட்டான் குருவிகள் உள்ளிட்ட பறவை இனங்கள் அதிகமாக உள்ளன.

124 பறவை இனங்கள்

இந்தநிலையில் தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மணிவிழுந்தான் ஏரியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்த பணியின்போது, நீர்வாழ் பறவைகள் மட்டுமின்றி கரையோரத்தில் வாழும் பறவை இனங்களும் கண்டறியப்பட்டன. அவை கேமரா மற்றும் டெலஸ்கோப்புகள் மூலம் கண்டறியப்பட்டு, பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஏரி பகுதியில் தூய்மை படுத்தும் பணி நடந்தது. இந்த பணியில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.


Next Story