டெல்டாவில் இதுவரை 1.25 லட்சம் டன் நெல் கொள்முதல்


டெல்டாவில் இதுவரை 1.25 லட்சம் டன் நெல் கொள்முதல்
x

நடப்பாண்டு 1 மாதத்துக்கு முன்னதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் டெல்டாவில் இதுவரை 1.25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்


நடப்பாண்டு 1 மாதத்துக்கு முன்னதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் டெல்டாவில் இதுவரை 1.25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

உணவுத்துறை செயலாளர் ஆய்வு

தமிழக அரசின் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை விமானப்படை நிலையம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கிற்கு சென்று பார்வையிட்டார்.அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்குகளையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும், நெல் மூட்டைகள் லாரிகளில் இயக்கம் செய்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலளார் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாகுபடி பரப்பு அதிகரிப்பு

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 72 ஆயிரம் எக்டேரில் நடந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. இதே போல கடந்த ஆண்டும் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. கடந்த ஆண்டு 1.97 லட்சம் டன் குறுவையில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 2.20 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் சேமிப்பு குடோன்கள்

டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் 2.86 லட்சம் டன் சேமிக்கும் வகையில் குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் இறுதிக்குள்ளாக இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் சேமிப்பு குடோன்களில் வைப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளோம். அதன்படி திருச்சியில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற்கான காலி இடம் உள்ளது. அதை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை பிடித்து வருகிறோம். கடந்த 10 நாட்களில் 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, 3.5 மெட்ரிக் டன் கோதுமை தனியார் மில்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பிடித்தோம். மேலும் இரண்டு தனியார் மில்லில் ஆய்வு செய்து மொத்தமாக 120 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் தனி நபர்கள் இறந்தவர்கள் என 2.45 லட்சம் பேரும், கூட்டு குடும்ப அட்டையில் இறந்த நபர்கள் என 14.26 லட்சம் பேரும் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க டி.ஜி.பி. ஆபாஷ்குமார் தலைமையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர்கள், 87 சப் இன்ஸ்பெக்டர்கள் என பணியில் உள்ளனர். அதே சமயம் அரிசியை வாங்கி தனியார் வியாபாரியிடம் விற்பனை செய்யாமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது தொடர்பான பெரும்புள்ளிகளையும் ரேஷன் கடைகள், குடோன்களில் உள்ள கருப்பு ஆடுகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருவதை தடுக்க, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் நடப்பு பருவத்தில் 1 மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கியதால் 722 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story