அரசு பள்ளி மாணவர்கள் 128 பேர் தேர்ச்சி


அரசு பள்ளி மாணவர்கள் 128 பேர் தேர்ச்சி
x

அரசு பள்ளி மாணவர்கள் 128 பேர் தேர்ச்சி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 128 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களை கலெக்டர் வினீத் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.

நீட் தேர்வு தேர்ச்சி

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 418 பேர் தேர்வு எழுதினார். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் பள்ளி மாணவி வைஷ்ணவி 320 மதிப்பெண்களும், சந்துரு என்ற மாணவன் 343 மதிப்பெண்களும், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 289 மதிப்பெண்களும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்திரி 287 மதிப்பெண்களும், கே.எஸ்.சி. ஆண்கள் பள்ளி மாணவன் அரவிந்த் கார்த்திக் 285 மதிப்பெண்களும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவி ஸ்வேதா 282 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இவர்கள் முதல் முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அழகு என்ற மாணவி 2-வது முறையாக நீட் தேர்வு எழுதி 372 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

128 பேர் தகுதி

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறும்போது, '93 மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள். அதன்படி மாவட்டத்தில் 128 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இனி கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கும். தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த 560 பேருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு இடம் கிடைக்கும். அதன்படி ரேங்கிக் அடிப்படையில் தகுதி பெற உள்ளனர்.

கடந்த ஆண்டு 80 பேர் தகுதி பெற்றனர். இந்த ஆண்டு 128 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 36 பேர் கவுன்சிலில் பங்கேற்று 28 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். மீதம் உள்ள 8 மாணவர்களுக்கு இடம் கிடைத்தும் அவர்கள் பொறியியல் படிப்புக்கு சென்று விட்டனர்' என்றார்.

கலெக்டர் பாராட்டு

இந்தநிலையில் நீட் தேர்வில் தகுதி பெற்ற 128 மாணவ-மாணவிகளுக்கு நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் வினீத் மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். தேநீர் விருந்தும் அளித்தார். திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரிகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


Next Story