கடந்த 3 மாதத்தில் விபத்துகளில் 128 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் விபத்துகளில் 128 பேர் இறந்துள்ளதாக கலெக்டர் உமா வேதனை தெரிவித்து உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று பாச்சல் பாவை என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கடந்த 2018-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 178 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மூலம் விபத்து ஏற்படாமல் தடுத்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள், சாலை பாதுகாப்பு விழா, தலைக்கவசம் அணிவது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
128 பேர் சாவு
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் இந்த சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதாலும், வாகன உரிமம், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் விளைவுகளை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்து ஏற்பட்டு, 128 பேர் இறந்து உள்ளார்கள். எனவே மாணவர்கள் வேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது. மாணவர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நல்ல முன்னுதாரணமான, சிறந்த நபரை தேர்ந்தெடுத்து வாழ்வில் நல்ல நிலையை அடைந்து தங்களது, நாட்டிற்கும், பெற்றோர்களுக்கும், இந்த சமூகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ரூ.25 ஆயிரம் அபராதம்
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதமும், அவர்களது பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 12 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது. எனவே சாலை விதிகளை சரியாக பின்பற்றி சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) கந்தசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.