ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 129 பேர் கைது
ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 129 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 129 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் நேற்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் ஒன்று திரண்டனர். இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்தும், பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி, ரெயில் மறியலுக்காக, ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
129 பேர் கைது
அப்போது, ஈரோடு காளைமாட்டு சிலை சந்திப்பினை கடந்து செல்ல முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார், காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். பின்னர் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, கவுன்சிலர் ஈ.பி.ரவி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவஹர் அலி, மாவட்ட துணைத்தலைவர் பாஷா, விஜய்கண்ணா, முன்னாள் மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ். சச்சிதானந்தம், முன்னாள் மாவட்ட செயலாளர் சேதுவெங்கட்ராமன் மற்றும் 12 பெண்கள் உட்பட 129 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுமுடி பஸ் நிலையத்தில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர்.