திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை 13 கவுன்சிலர்கள் முற்றுகை


திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை 13 கவுன்சிலர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி செய்யாததை கண்டித்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை 13 கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ஆணையாளர் மற்றும் நகரமன்ற தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

திட்டக்குடி:

திட்டக்குடி நகரமன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வெண்ணிலா கோதண்டம், நகராட்சி ஆணையாளராக ஆண்டவர் ஆகியோர் உள்ளனர். திட்டக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தி ஓராண்டாகியும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் தனபால், முத்துவேல், மாலதி பிரேம்குமார், மஞ்சுளா, அமிர்தவள்ளி, கண்மணி, விமலா, மகேஸ்வரி, மீனாட்சி, அன்பழகன், மற்றொரு அமிர்தவள்ளி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜவேல், சிலம்பரசி ஆகியோர் நேற்று திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மிகப்பெரிய ஊழல்

பின்னர் அவர்கள், தரம் உயர்த்திய பிறகும் அடிப்படை வசதி செய்யாதது ஏன்?, இதுவரை நடந்த 6 நகரமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறாமல் தீர்மானங்கள் நிறைவேற்றியது எப்படி?, எங்களது கையெழுத்தை போலியாக போடப்பட்டுள்ளதா?, நகராட்சி நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும், தீர்மான நோட்டுகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவேடுகளை காண்பிக்க வேண்டும் என்றும் ஆணையர் மற்றும் நகரமன்ற தலைவரிடமும் கேட்டனர். ஆனால் கவுன்சிலர்களின் புகார்களுக்கு இருவரும் பதில் அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி ஆணையர் ஆண்டவர், ஆபாசமாக பேசியதோடு கவுன்சிலர்களை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

போலீசிடம் புகார்

இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நகராட்சி ஆணையாளர் மீது 13 கவுன்சிலர்களும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யாவிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திட்டக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story