ஒரே நாளில் 13 மாடுகள் பிடிபட்டன


ஒரே நாளில் 13 மாடுகள் பிடிபட்டன
x

தஞ்சை மாநகர சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதாக வந்த புகாரின் பேரில் ஒரே நாளில் 13 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டத

தஞ்சாவூர்

தஞ்சை மாநகர சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதாக வந்த புகாரின் பேரில் ஒரே நாளில் 13 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுற்றி திரியும் மாடுகள்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிரத்யேக வாகனம் மூலம் பிடித்து காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பதுடன் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல்முறையாக பிடிபடும் மாடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், கன்றுக்கு ரூ.1,500-ம் வசூலிக்கப்படும்.

அதேமாடு 2-வது முறையாக பிடிபட்டால் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும், கன்றுக்கு ரூ.2 ஆயிரமும், அதேமாடு 3-வது முறையாக பிடிபட்டால் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், கன்றுக்கு ரூ.2,500-ம் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் அதே மாடு தொடர்ந்து பிடிபட்டால் அந்த மாடு ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதாக புகார்கள் வந்தன.

ஒரே நாளில் 13 மாடுகள் பிடிபட்டன

இந்தநிலையில் நேற்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி ரெட்டிப்பாளையம் ரோடு, மானோஜிப்பட்டி, கண்ணன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளும், ஒரு கன்றும், சோழன்சிலை பகுதியில் 5 மாடுகளும், ஒரு கன்றும், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குறிஞ்சி நகரில் ஒரு மாடும் பிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராத தொகையாக ரூ.36 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் இதுவரை 51 மாடுகளும், 40 கன்றுகளும் பிரத்யேக வாகனம் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி தெரிவித்தார்.


Next Story