மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் ரூ.13 கோடியில் உயர்மட்ட பாலம்
மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் ரூ.13 கோடியில் உயர்மட்ட பாலம்
பட்டுக்கோட்டை அருகே கார்காவயல் ஊராட்சியில் மகாராஜசமுத்திரம் காட்டாற்றில் ரூ.13 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
உயர்மட்ட பாலம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்காவயல் ஊராட்சியில் மகாராஜா சமுத்திரம் காட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. 472 அடி நீளமும், 34 அடி அகலமும் கொண்டதாக உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகு மூலம் ரூ.13 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் முன்பு இருந்த பாலத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் தளங்கள் பெயர்ந்து உடைந்து இருந்தன. மழை காலங்களில் காட்டாற்று பாலத்தின் மேற்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது.
கிழக்கு கடற்கரை சாலை
பட்டுக்கோட்டையில் இருந்து தொண்டி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த பாலம் உள்ள பகுதி முக்கிய வழித்தடமாகும். இந்த வழியாக சென்றால் கிழக்கு கடற்கரை சாலையை அடையலாம்.
மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது தண்ணீர் செல்ல முடியாமல் அடைத்து இருந்ததால் காட்டாற்று வெள்ளம் அருகில் உள்ள வயல்களுக்கு புகுந்து பயிர்கள் மூழ்கி அழுகி பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
கிராம மக்கள் கோரிக்கை
எனவே மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கார்காவயல், கோட்டாகுடி, பண்ணவயல், கூத்தாடி வயல், கொண்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி இந்த உயர்மட்ட பாலம் மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.