போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.13¾ லட்சம் நிதிஉதவி
கூடலூரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.13¾ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கிட்டுராஜன் (வயது 48). இவர் கடந்த 1999-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்தவர். கடந்த ஜூலை மாதம் இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக போலீசார் நிதி திரட்டி கொடுக்க முடிவு செய்தனர். உதவும் உறவுகள் என்ற குழுவின் மூலம் தமிழகம் முழுவதும் சக போலீசாரிடம் நிதி திரட்டினர். அந்த வகையில் 2 ஆயிரத்து 737 போலீசார் நிதி உதவி அளித்தனர். மொத்தம் ரூ.13 லட்சத்து 86 ஆயிரத்து 500 நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை போலீஸ் ஏட்டு கிட்டுராஜனின் மனைவி அம்பிகா, தாய் மேரி மற்றும் குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிதி உதவியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கினார். அப்போது, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக போலீசார் பலர் உடனிருந்தனர்.