மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ லட்சம் கடன் உதவி


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ லட்சம் கடன் உதவி
x

நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13½ லட்சம் கடன் உதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13½ லட்சம் கடன் உதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பாளையங்கோட்டை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்மாளங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலையை ஆய்வு செய்தார். அங்குள்ள குளங்களை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டார்.

மானூர் யூனியனுக்கு உட்பட்ட எட்டாங்குளம் பஞ்சாயத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமத்துவபுரம்

இதைத்தொடர்ந்து அழகியபாண்டியபுரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை புதுப்பிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள 100 வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 78 வீடுகளுக்கு பணிகள் முடிந்து விட்டது. மீதம் 22 வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக தேவர்குளம் ஊராட்சியில் பனை ஓலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் ரூ.31.25 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொருளாதார நிலை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அவரது வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மகளிர் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாதி ரீதியிலான பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக தி.மு.க ஆட்சியில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவை புனரமைக்கப்படாமல் இருக்கிறது. தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டு சமத்துவபுரங்களில் ரேஷன் கடை, அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பனைஓலை உற்பத்தி கூடம், மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களின் பொருளாதார நிலையும் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள்

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, யூனியன் தலைவர்கள் தங்கபாண்டியன் (பாளையங்கோட்டை), ஸ்ரீலேகா அன்பழகன் (மானூர்), கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவஅய்யப்பன், பஞ்சாயத்து தலைவர்கள் டேவிட் (ராமையன்பட்டி), வேலம்மாள் (அழகியபாண்டியபுரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story