13 மொபட்டுகளை திருடியவர் கைது
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 13 மொபட்டுகளை திருடிய ஆசாமியை உடுமலை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொடர் திருட்டு
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள், மதுக்கடைகள் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டன.
இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் உடுமலை துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.13 மொபட்டுகளை திருடியவர் கைது
13 வாகனங்கள் மீட்பு
மேலும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் இந்த தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் பழனி தாத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுலைமான் (வயது 58) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 12 மொபட்டுகள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் 2 மொபட்டுகள் பழனி போலீஸ் நிலைய எல்லையிலும், 2 மொபட்டுகள் மடத்துக்குளம் பகுதியிலும், 2 மொபட்டுகள் உடுமலை பகுதியிலும், 1 மொபட் பல்லடம் பகுதியிலும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது. மீட்கப்பட்ட அனைத்து மொபட்டுகளும் உரிய விசாரணைக்கு பிறகு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.