நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 13 புதிய வீடுகள்


நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 13 புதிய வீடுகள்
x

நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 13 புதிய வீடுகள்

தஞ்சாவூர்

செந்தமிழ் நகர் திட்டத்தின் கீழ் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 13 புதிய வீடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து ஒப்படைத்தார்.

செந்தமிழ்நகர் திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்னும் விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2 கட்டங்களை உள்ளடக்கியது.

பட்டா கொடுப்பதற்காக தகுதியான இடத்தை நேரடி பேச்சுவார்த்தை அந்த மூலம் தனியாரிடம் இருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவு நீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

13 புதிய வீடுகள் திறப்பு

2-வது கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டி கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதில் முதல் கட்டமாக 10 செந்தமிழ் நகர் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக 4 செந்தமிழ் நகரில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூதலூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 13 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வீடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். முன்னதாக கலெக்டர் உள்ளிட்டோரை நரிக்குறவர் சமுதாய மக்கள் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். இந்த வீடுகள் மாவட்ட கலெக்டரின் தன் விருப்பநிதி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனுதவி திட்டத்தின் மூலமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீடுகளை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகிழ்ச்சி

விளிம்பு நிலை மக்களின் நலனில், மிகுந்த அக்கறை கொண்டு, கடந்த ஆண்டு, அவர்களின் குடியிருப்புக்கு நேராக சென்று, அவர்களோடு உணவு சாப்பிட்டு குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைய வேண்டும். குறிப்பாக, சாதி சான்றிதழ் போன்ற, அடிப்படை தேவைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் தற்போது தஞ்சை மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் ஜனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விலையின்றி இந்த இடத்தை விளிம்பு நிலை மக்களுக்கு அளித்தனர். இதையடுத்து இங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான வீடுகளாக கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் 320 சதுர அடியில் மழை நேரங்களிலே, தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இந்த 13 வீடுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விளிம்புநிலை மக்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சரின் இந்த சிறப்பு திட்டத்தில் இந்த வீடுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story