13 பேர் உடல் கருகி பலி
ஓசூர் அருகே பட்டாசு கடையில் நடந்த பயங்கர தீ விபத்தில் 13பேர் உடல் கருகி பலியானார்கள். ரூ.2 கோடி பட்டாசுகள், 15 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
ஓசூர்
பட்டாசு கடைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை காலங்களில் இங்கு அதிகளவில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பட்டாசு வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் அத்திப்பள்ளியில் உள்ள இந்த பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் நேற்று வந்து இறங்கின. அப்போது பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பட்டாசுகள் அடுத்தடுத்து டமார், டமார் என வெடிக்க தொடங்கின. இதில் தீ மளமளவென அருகில் நின்ற வாகனங்கள் மற்றும் மற்ற பட்டாசு கடைகளுக்கும் பரவியது. அப்போது பட்டாசு கடைக்குள் இருந்தவர்களும் உள்ளே சிக்கி கொண்டனர்.
தீ விபத்து
இந்த தீ விபத்தை பார்த்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஓசூர் தீயணைப்பு நிலையம் மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, ஆனேக்கல் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் தீயை உடனடியாக அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர். மேலும் அந்த இடத்தில் வானுயர தீப்பிளம்பு ஏற்பட்டதுடன், கரும்புகை மூட்டமாகவும் காட்சி அளித்தது. இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி பட்டாசுகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரி, 2 சரக்கு வேன்கள், 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த கோர தீ விபத்தின்போது பட்டாசுகள் வெடித்து சாலையில் சிதறியதால் ஓசூர்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
12 பேர் சாவு
இதற்கிடையே பட்டாசு கடைக்குள் சிக்கியவர்கள் பின்வாசல் வழியாக வெளியில் சென்றார்களா? அல்லது உள்ளே சிக்கிய அவர்களின் கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பட்டாசு கடையில் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடைக்குள் சென்றனர்.
அப்போது அங்கு 12 பேர் உடல் கருகி இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடைய உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து 12 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடையில் இருந்த மற்றவர்கள் நிலை குறித்து தீ முழுமையாக அணைந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தொடர் விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தீபாவளி பண்டிகைக்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் மொத்தமாக கொண்டு வந்து இறக்கும்போது தீ விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் பட்டாசு விபத்துக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு குடோன்களில் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கெலமங்கலம் அருகே பட்டாசு கடைகளில் ஆய்வு செய்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து பட்டாசு குடோன்கள், கடைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ளதால் பட்டாசு கடைகள் வைப்பதில் உள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஓசூர் அருகே மாநில எல்லையில் நேற்று மீண்டும் ஒரு பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தில் 3 பேர் படுகாயம்
இந்த கோர விபத்தில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர் நவீன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு கடை, குடோன்களில் தர்மபுரி மாவட்டம் அரூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர்களும், வாணியம்பாடி, கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.