ராணுவ வீரர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
கருப்பூர் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கருப்பூர் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணுவ வீரர்
சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். ராணுவ வீரர். தற்போது இவர் ஜான்சியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமலா (வயது 29). வெங்கடேசன் விடுமுறையில் வரும்போது மட்டும் கணவன், மனைவி இருவரும் கோட்ட கவுண்டம்பட்டி வீட்டில் தங்குவார்கள்.
விடுமுறை முடிந்து வெங்கடேசன் பணிக்கு சென்ற பிறகு, அமலா அருகில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் வீடு பூட்டி கிடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அங்கு உள்ளவர்கள் அமலாவிற்கு தகவல் கொடுத்தனர்.
நகை திருட்டு
அதன்பேரில் அவர் வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் நகை மற்றும் ஒரு டி.வி. ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் கருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.