திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 171 மாணவர்கள் தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 171 மாணவர்கள் தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 13 ஆயிரத்து 171 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். 972 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி திருவாரூரில் பிளஸ்-2 மாணவர்கள் ஏராளமானோர் தேர்வு எழுதினர். 10 மணிக்கு தொடங்க கூடிய தேர்வுக்கு மாணவர்கள் 9 மணி முதலே தேர்வு மையத்திற்கு வந்தனர். 9.30 மணிக்கு அந்தந்த தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு முதன்மை அதிகாரிகள் மூலம் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
9.50 மணிக்கு தேர்வு அறைக்கு மாணவர்களை அனுப்பிவிட்டு தேர்வு கண்காணிப்பாளர்களும் 10 மணிக்குள் தேர்வு அறைக்கு சென்றுவிட்டனர். தொடர்ந்து 2 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று கொண்டு வினாத்தாள் உறையில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் 10.15-க்கு தொடங்கிய தேர்வு 1.15 மணி வரை நடந்தது.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் 5,987 மாணவர்களும், 7,184 மாணவிகளும் என மொத்தம் 13,171 பேர் தேர்வு எழுதினர். 622 மாணவர்கள், 350 மாணவிகள் என 972 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. அதனை தொடர்ந்து ஒருநாள் இடைவெளியில் ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தேர்வு நடத்தப்பட்டு அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது.
முன்னதாக திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவாரூர் நகரில் உள்ள ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், மாணவர்கள் பயமின்றி தேர்வை எழுத வேண்டும். எந்த ஒரு வேண்ட தகாத செயல்களில் ஈடுபட வேண்டாம். மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத அவர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களை மாற்றுத் திறனாளிகள் முழுமையாக பயன்படுத்தி நல்லமுறையில் தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றார். ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் விஜயா, அரசு ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் மாவட்ட கண்காணிப்பாளர் சுமதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.