காவனூர்-கள்ளிப்பாடி இடையே உயர்மட்ட பாலம் கட்டக்கோரிவெள்ளாற்றுக்குள் இறங்கி 13 கிராம மக்கள் போராட்டம்வீடுகளிலும் கருப்பு கொடியேற்றினர்


காவனூர்-கள்ளிப்பாடி இடையே உயர்மட்ட பாலம் கட்டக்கோரிவெள்ளாற்றுக்குள் இறங்கி 13 கிராம மக்கள் போராட்டம்வீடுகளிலும் கருப்பு கொடியேற்றினர்
x

காவனூர்-கள்ளிப்பாடி இடையே உயர்மட்ட பாலம் கட்டக்கோரி வெள்ளாற்றுக்குள் இறங்கி 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றினார்கள்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ளது காவனூர் கிராமம். இந்த கிராமத்துக்கும் கள்ளிப்பாடி கிராமத்துக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இதில் காவனூர், மருங்கூர், கீரனூர், வல்லியம், சக்கரமங்களம், கார்மாங்குடி, மேலப்பாளையூர், தொழூர், கொடுமனூர், கீழப்பாளையூர், தேவங்குடி, பவழங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் ஸ்ரீமுஷ்ணம் வர வேண்டும் என்றால் கருவேப்பிலங்குறிச்சி வழியாக சுமார் 30 கி.மீ. தூரம் சுற்றித்தான் வர வேண்டும். ஆனால், காவனூரில் இருந்த வெள்ளாற்றை கடந்து கள்ளிப்பாடி வழியாக சென்றால் ஸ்ரீமுஷ்ணத்துக்கு 5 கி.மீ. தூரம் தான். இதற்கு காவனூர்-கள்ளிப்பாடி கிராமத்துக்கு இடையே பாலம் வசதி ஏதும் இல்லை. இதனால், இந்த இரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று 13 கிராம மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கிடப்பில் போடப்பட்ட பாலம்

அந்த வகையில் கடந்த 7 ஆண்டுக்கு முன், காவனூர்-கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் தாலுகா அலுவலகம், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த ஒரு தேவைகளும் மேற்கூறிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு முழுமையாக கிடைக்காமல் இருந்து வருகிறது.

கருப்பு கொடியுடன் போராட்டம்

இந்தநிலையில், தற்போது உயர்மட்ட பாலம் கட்டித்தரக்கோரி 13 கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியாக நேற்று அவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று காவனூர்-கள்ளிப்பாடி இடையே ஓடும் வெள்ளாற்றுக்குள் கருப்பு கொடிகளுடன் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும், பாலம் கட்டுவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story