132 கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது


132 கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது
x

கூடலூர் வழியாக கேரளாவுக்கு கார்களில் கடத்திய 132 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் வழியாக கேரளாவுக்கு கார்களில் கடத்திய 132 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுவிலக்கு போலீசார் சோதனை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையும், கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு ஏராளமான சரக்கு லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லாவிலும், கேரள எல்லையான நாடுகாணியிலும் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கூடலூர்-கேரள எல்லையில் உள்ள வழிக்கடவு சோதனைச் சாவடியில் கேரள மதுவிலக்கு பிரிவு கமிஷனர் அனில் குமார் மற்றும் கிருஷ்ணகுமார், மதுசூதனன் உள்ளிட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றும் முன்தினம் இரவு 10.30 மணிக்கு திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரில் இருந்து வந்த 2 கார்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

மேலும் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இந்த சமயத்தில் சக போலீசார் கார்களை சோதனை செய்தனர். அப்போது 2-வதாக நின்ற காரின் பின்பக்கம் 15-க்கும் மேற்பட்ட பண்டல்கள் இருப்பதை பார்த்தனர். பின்னர் அதை திறந்து பார்த்த போது கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 132 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் கைப்பற்றினர். பின்னர் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டியை சேர்ந்த சமது, சபீக், சையது, நவாஷ், கோழிக்கோட்டை சேர்ந்த அமல் ஆகிய 5 பேரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஆந்திராவிலிருந்து மைசூருவுக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டது. பின்னர் கூடலூர் வழியாக மலப்புரத்துக்கு கொண்டு வரும்போது கையும் களவுமாக பிடித்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து யார் யாருக்கெல்லாம் வினியோகம் செய்யப்படுகிறது என்ற விபரம் தொடர் விசாரணையின் முடிவில் தெரிய வரும். மேலும் நோட்டம் விடுவதற்காக முதல் கார் முன்பாக செல்ல 2-வது காரில் பதுக்கி வைத்து கஞ்சா கடத்தப்பட்டு உள்ளது என்றனர்.Next Story