பிளஸ்-2 ஆங்கில தேர்வை 1,325 பேர் எழுதவில்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 ஆங்கில தேர்வை 1,325 பேர் எழுதவில்லை. காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. நேற்று ஆங்கில தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த தேர்வை 19 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,325 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. ஏற்கனவே தமிழ்பாடத்தேர்வையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதவில்லை. தொடர்ந்து ஆங்கில பாடத்தேர்வுக்கும் பலர் வரவில்லை.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது கொரோனா காலக்கட்டத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள். இவர்களில் சிலர் பள்ளி திறக்கப்படாத காலக்கட்டத்தில் வேலைக்கு சென்றதால் அவர்களை தேடிப்பிடித்து தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி இருந்தும் ஒரு சிலர் பள்ளிக்கு வந்தாலும் பொதுத்தேர்வு பயத்தில் தேர்வு எழுதவரவில்லை. ஒரு சிலர் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேர்ச்சி விகிதம் குறையுமா?
நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு எண் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்கும் போது 'ஆப்சென்ட்' எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. இதேபோல் தனித்தேர்வர்கள் சிலரும் தேர்வு எழுதவரவில்லை. இதனால் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையுமா? என்றால், இல்லை என தான் சொல்ல முடியும். ஏனெனில் தேர்வு எழுதியவர்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் தேர்ச்சி விகிதம் கணக்கிடப்படும். அந்த வகையில் தேர்வுக்கு வராத மாணவர்களால் தேர்ச்சி விகிதம் குறைவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்தாலும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது பிளஸ்-2 வகுப்பிலும் அதுபோல் பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் பெயர்களை நீக்காமல் அந்தந்த பள்ளி மூலம் நுழைவுச்சீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வராமல் இருக்கும் விவகாரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.