தேசிய நுகர்வோர் தினவிழாவில் ரூ.14½ கோடி கடன்உதவி


தேசிய நுகர்வோர் தினவிழாவில் ரூ.14½ கோடி கடன்உதவி
x

திண்டுக்கல்லில் நடந்த தேசிய நுகர்வோர் தினவிழாவில் ரூ.14½ கோடி கடன்உதவி வழங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினர்.

திண்டுக்கல்

நுகர்வோர் தினவிழா

மாநில அளவில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் பூங்கொடி வரவேற்றார். வேலுச்சாமி எம்.பி., உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் பூஜாகுல்கர்னி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தேசிய நுகர்வோர் தின போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், சிறப்பாக பணியாற்றிய ரேஷன்கடை பணியாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினர். இதேபோல் 2 ஆயிரத்து 182 பேருக்கு ரூ.14 கோடியே 56 லட்சம் மதிப்பில் கடன ்உதவிகளையும் அவர்கள் வழங்கினர்.

பன்முக தன்மையில் கூட்டுறவு

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் 'எல்லோருக்கும் எல்லாம்' எனும் ரீதியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பொதுவினியோக திட்டத்தில் 8 கோடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சென்றடைகிறது. ரேஷன்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட அனைத்தும் தரமாக வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திலும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் கூட்டுறவுத்துறையை பன்முக தன்மையோடு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நுகர்வோர்களை பாதுகாக்கவும், குறைகளை தீர்க்கவும் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்துகிறது, என்றார்.

கருவிழி பதிவு

அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் மாநில அளவில் 3,105 நுகர்வோர் வழக்குகளுக்கும், மாவட்ட அளவில் 12,861 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. இதேபோல் புதிதாக 15 லட்சத்து 6,189 ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கைரேகை பதிவுகள் மூலம் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதை தவிர்க்க, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் முறை 2 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். மேலும் ரேஷன்கடைக்கு வரஇயலாத 3½ லட்சம் பேருக்கு, வேறுநபரை நியமித்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் விழிப்புணர்வு பெற்ற நுகர்வோராக மாற வேண்டும், என்றார்.

நுகர்வோர் ஆணையம்

விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழகத்தில் 2¼ கோடி ரேஷன்கார்டுகள் மூலம் 8 கோடி பேருக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் ஆணையங்கள் செயல்படுகின்றன. பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் உடனே ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் கூட்டுறவு அங்காடிகள், பண்ணை பசுமை காய்கறி கடைகள், கூட்டுறவு சந்தை எனும் செயலி செயல்பாட்டில் உள்ளன, என்றார்.

மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதை அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story