கடல் அரிப்பை தடுக்க ரூ.14½ கோடியில் பணிகள்
விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ரூ.14½ கோடி மதிப்பில் கடல் அரிப்பு தடுப்புப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுகாவிற்குட்பட்ட கடலோர கிராமப்பகுதிகளில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பிள்ளைச்சாவடியில் ஆக்ரோஷ அலையால் இடிந்து விழுந்த 10 வீடுகளையும் அவர் பார்வையிட்டார்.
மாண்டஸ் புயல் கரையை கடந்த நேரத்தில் கீழ்ப்புத்துப்பட்டு பகுதியில் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணியையும், சேதமடைந்த குடியிருப்புகளையும் அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் கீழ்ப்புத்துப்பட்டு இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கும், பிள்ளைச்சாவடி நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கும் உணவு, உடை, போர்வை, பாய் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிவாரண முகாம்களில் 2,850 பேர்
மாண்டஸ் புயல் காரணமாக. விழுப்புரம் மாவட்டத்தில் 38 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது. புயல் காரணமாக பெரிய அளவில் வீடுகளுக்கோ, கால்நடைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக பயிர் சேதம் ஏதுமில்லை. இருப்பினும் பயிர் சேதம் குறித்து ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்களிலுள்ள அனைத்து மக்களையும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 18 புயல் நிவாரண மையங்களில் 2,850 பேரை தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வேரோடு சாய்ந்த 15 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடல் அரிப்பு தடுப்புப்பணிகள்
புயல் காற்றினால் மின்வழித்தடங்களில் மரக்கிளைகள் விழுந்தன. இதனால் தடைப்பட்டிருந்த மின் வினியோகம் சீர்செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து இல்லம் தேடி கல்வித்திட்டத்தை தொடங்கி வைத்தபோது பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடல் அரிப்பை தடுக்க இப்பகுதிக்கு தூண்டில் வளைவு வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் பிள்ளைச்சாவடி பகுதியில் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குத்தளம் மற்றும் கடல் அரிப்பு தடுப்புப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அப்பணிகள் நடைபெறவுள்ளது. அரசின் சார்பில் தேவையான நிவாரண உதவிகள் பெற்றுத்தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டாரவி தேஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் தயாளன், உஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.