ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க.வின் 14 பணிமனைகளுக்கு 'சீல்'


ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க.வின் 14 பணிமனைகளுக்கு சீல்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. வினர் அனுமதியின்றி திறந்த 14 பணிமனைகளுக்கு ‘சீல்' வைத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க. உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் விதிகளை மீறி தேர்தல் பணிமனை அமைத்து மக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது.

மேலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கிருஷ்ணனுண்ணி, கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோரிடமும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில் தேர்தல் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர், போலீசார் ஆகியோர் கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்படும் தேர்தல் பணிமனைகளை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் தி.மு.க. சார்பில் 10 இடங்களிலும், அ.தி.மு.க. சார்பில் 4 இடங்களிலும் என மொத்தம் 14 இடங்களில் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் திறந்திருப்பது தெரியவந்தது.

தேர்தல் பணிமனை

அதன்படி தி.மு.க. சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே.ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம், வைராபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடைமேடு ஆகிய 10 இடங்களில் அனுமதி இன்றி பணிமனைகள் செயல்பட்டதால் அவைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு திருவள்ளுவர் நகர், கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள பணிமனை, ஆலமரத்து தெரு, மணல்மேடு ஆகிய 4 இடங்களில் உள்ள பணிமனைகளும் அனுமதியின்றி செயல்பட்டதால் அவைகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

ஒரு சில பணிமனைகளுக்கு சீல் வைக்கும்போது போலீசாருடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story