தூத்துக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 14½ லட்சம் வாக்காளர்கள்


தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தூத்துக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 14½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 32 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தூத்துக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 14½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 32 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

வரைவு பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடக்கிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மாவட்ட அ.தி.மு.க துணை செயலாளர் சந்தனம், பா.ஜனதா சிவராமன், காங்கிரஸ் முத்துமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 364 வாக்காளர்களும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 961 வாக்காளர்களும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 975 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 580 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 576 வாக்காளர்களும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 513 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 7 லட்சத்து 11 ஆயிரத்து 688 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 85 பெண் வாக்காளர்கள், 196 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 55 ஆயிரத்து 969 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தாலுகா அலுவலகங்கள்

இதே போன்று தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வக்குமார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் புகாரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் மகாலட்சுமி மற்றும் ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் தாலுகா அலுவலகங்களில் தாசில்தார்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.


Next Story