ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்


ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதிய மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதிய மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நேற்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 245 மனுக்கள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில், தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு டிராக்டர்கள் தலா ரூ.2.25 லட்சம் மானியத்திலும், ஒரு பயனாளிக்கு பயணியர் வாகனம் ரூ.2.15 லட்சம் மானியத்திலும், ஒரு பயனாளிக்கு லோடு வாகனம் ரூ.2.25 லட்சம் மானியத்திலும் உள்பட ரூ.14.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

டவுன் பஸ் விட வேண்டும்

கூட்டத்தில், இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் லூர்து நாடார் தலைமையில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அதில், வீ.கே.புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட வாடியூர் என்ற கிராமத்திற்கு தென்காசியில் இருந்து சுமார் 37 ஆண்டுகளாக டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் கொரோனா காலத்தில் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தடம் எண் மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை உடனே இயக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளி

கடையம் ஒன்றியம் கருத்தப்பிள்ளையூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச்செயலாளர் கிறிஸ்டோபர் கொடுத்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலன் கருதி மத்திய அரசின் நவோதயா பள்ளி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.



Next Story