சாலையின் தடுப்பு சுவரில் வேன் மோதி கவிழ்ந்து 18 பேர் காயம்


சாலையின் தடுப்பு சுவரில் வேன் மோதி கவிழ்ந்து 18 பேர் காயம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே, சாலையின் தடுப்பு சுவரில் வேன் மோதி கவிழ்ந்ததில் 18 பேர் காயம் அடைந்தனர்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே, சாலையின் தடுப்பு சுவரில் வேன் மோதி கவிழ்ந்ததில் 18 பேர் காயம் அடைந்தனர்.

மாநாடுக்கு சென்றவர்கள்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பு ஆயத்த மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சென்றனர். மாநாடு முடிந்த பின்னர் நேற்று முன்தினம் இரவு வேனில் 18 பேர் சென்னையில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 38) என்பவர் வேனை ஓட்டி வந்தார்.

கவிழ்ந்தது

நேற்று காலை தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் அருகே ஒத்தக்கடை விலக்கு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது ராமநாதபுரம் தோப்பு பகுதியில் இருந்து குப்பை அள்ளிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையை நோக்கி செல்வதற்காக வந்த டிராக்டர் ரோட்டை கடந்து சென்றது. இதனால் வேன் நிலைதடுமாறி சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

18 பேர் காயம்

இந்த விபத்தில் தென்காசி மாவட்டம் இடைகால் பால்பண்ணை தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி (56), தென்காசி கூழக்கடை தெருவை சேர்ந்த முத்துமாரி (53), சுந்தரபாண்டியபுரம் பாவணர் தெருவை சேர்ந்த செல்வி (48), கொடிக்குறிச்சி சிவராமபேட்டைதெற்கு தெருவைச் சேர்ந்த புஷ்பவல்லி (35), டிரைவர் கருப்பசாமி, தென்காசி சொக்கலிங்க சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பூமாரியம்மாள் (35) உள்பட 18 பேர் காயம் அடைந்தனர்.

எம்.எல்.ஏ. உதவி

இதுபற்றி வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சாகுல்ஹமீது தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா, வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசியில் சிகிச்சை

இதில், ராஜேஸ்வரி, முத்துமாரி, செல்வி, புஷ்பவல்லி, கருப்பசாமி ஆகிய 5 பேரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவிவீனா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

---------------



Next Story