தேசிய திறனறி தேர்வில் 14 மாணவர்கள் தேர்ச்சி
தேசிய திறனறி தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 14 மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊட்டி
தேசிய திறனறி தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 14 மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
தேசிய திறனறி தேர்வு
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தால் மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும். இந்த திட்டம் மாணவ-மாணவிகள் பள்ளி இடைநிற்றலை குறைக்க உதவுகிறது.
நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடைபெற்றது. இதில் நீலகிரி முழுவதும் சுமார் 300 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
14 பேர் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் இந்த தேர்வில் தற்போது 14 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
தெங்குமரஹாடா அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த நிதிஷ்குமார், கண்ணேரிமந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதரன், தக்சிதா, சபரீஷ் குமார், பந்தலூர் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளி ரிபா பாத்திமா, ஊட்டி சி.எஸ்.ஐ. பள்ளி மாணவர் ஜோஸ்வா ஜஸ்டின், குன்னூர் செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அரபினா, மிருதுளா, பிரைஸ்லின், கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஹரிதா, சாரதிஸ்ரீ, பொன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தாரணி, கின்னக்கொரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய் மற்றும் நான்சஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி மாணவர் நிதிஷ்ராஜ் ஆகிய 14 பேர் தேர்வாகியுள்ளனர்.
பாராட்டு
இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் மற்ற மாவட்டங்களை விட நீலகிரியில் குறைவான மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் கூடுதல் மாணவ- மாணவிகளை தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.