14 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க பாண்டியாறு- மோயாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை; நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்ட ஈரோடு விவசாயிகள்


14 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க பாண்டியாறு- மோயாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை; நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்ட ஈரோடு விவசாயிகள்
x

14 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க பாண்டியாறு-மோயாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நீர்பிடிப்பு பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

ஈரோடு

14 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க பாண்டியாறு-மோயாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நீர்பிடிப்பு பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பாண்டியாறு-மோயாறு

பவானிசாகர் அணைக்கு தண்ணீரின் வரத்து குறைந்தபோது பல ஆண்டுகள் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்துபோயின. விவசாயம் பாதிக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

எனவே அரபி கடலில் சென்று வீணாக கலந்து வரும் பாண்டியாறு தண்ணீரை மாயாற்றில் திருப்பி விட்டு பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டு வருகிறது. பாண்டியாறு - புன்னம்புழா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது பாண்டியாறு - மோயாறு திட்டம் என்றும் கூறப்படுகிறது.

விவசாயிகள் பார்வையிட்டனர்

இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் விவசாயிகள் தரப்பில் வேளாண்மை நிபுணர்கள், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு இணைச்செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, சமூக ஆர்வலர் வேலுசாமி, மீன்வளத்துறை ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் கி.ஆர்.கிருஷ்ணன், கூடலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் நடராஜன், எம்.எஸ்.ஆண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளரான வேளாண்மைத்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:-

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பவானி ஆறு, மோயாறு ஆகியவற்றையும், பாண்டியாறு - புன்னம்புழா நீர்பிடிப்பு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டோம். அங்குள்ள பசுமைமிக்க புல்வெளி குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள், சுனை நீர் அருவிகள், சிறுசிறு ஓடைகள் ஆகியவற்றையும் வாகனங்கள் மூலமாகவும், பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றும் பார்வையிட்டோம்.

வீணாக கடலில் கலக்கிறது

கூடலூா் பகுதியில் உள்ள மங்குலிப்பாலம், வேடன் வயல், மணலி கொல்லி, பாடந்துறை, சுண்டவயல் ஆகிய பகுதிகளின் வழியாக ஓடும் ஓடைகளிலும், சிறிய ஆறுகளிலும் வறட்சியின்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பன்றிக்கொல்லி, ஊசி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஓடைகள் "குண்டு கூவ" என்ற பள்ளத்தாக்கில் பாய்ந்தோடுகிறது. கூடலூர் நகராட்சி நுழைவு வாயிலில் உள்ள இரும்பு பாலம் என்ற இடத்தில் 2 பெரிய ஓடைகள் ஒன்று சேர்ந்து "புன்னம்புழா" என்ற காட்டாறாக ஓடுகிறது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளிலும், மலைக்குன்றுகளிலும் பாண்டியாறு உற்பத்தியாகிறது.

ஆராட்டுப்பாறை பகுதியில் பாண்டியாறு, புன்னம்புழா ஆறு ஒன்றிணைந்து காட்டாறாக கேரளா மாநிலத்துக்குள் நுழைகிறது. அங்கு சாலியாறு என்ற பெயரில் ஓடும் ஆறு எந்த பாசன திட்டமும் இல்லாமல் வீணாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது. வறட்சி காலத்திலும் சராசரியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆண்டுக்கு மொத்தம் 14 டி.எம்.சி. தண்ணீர் வீணாகுவதாக நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.

எனவே பாண்டியாறு தண்ணீரை மோயாற்றுடன் இணைப்பதே பிரதான கோரிக்கையாகும். இதற்காக அணை கட்டுதல், தண்ணீர் உந்து நிலையம் அமைத்தல், மலையை குடைந்து சுரங்கம் அமைத்தல், ராட்சத குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு மோயாற்றில் தண்ணீரை திருப்பி விடுவதன் மூலமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதுதொடர்பாக தமிழ்நாடு-கேரள அரசுகள் ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story