துறவறம் ஏற்கும் இளம்பெண், 14 வயது சிறுவன்
திருப்பத்தூரில் இளம்பெண் மற்றும் 14 வயது சிறுவன் துறவியாக மாறுகிறார்கள்.
துறவறம்
திருப்பத்தூர் செட்டித்தெருவை சேர்ந்த பன்னாலால் கோத்தம் சந்த் பேத்தியும், ரத்தன்சந்தின் மகள் சுஷ்மா, வேலூர் சுனில்குமாரின் மகன் சம்ரத் (வயது 14) ஆகிய இருவரும் துறவறம் செல்கிறார்கள்.
இதுகுறித்து பி.பாரஸ்சந்த் என்பவர் கூறியதாவது:-
ஜெயின் மதத்தில் துறவியாக மாறுபவர்கள் தங்களுடைய தலைமுடியை தாங்களாக பிடுங்கி மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய உணவை வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து உட்கொள்ள வேண்டும். துறவியாக மாறியவுடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு எங்கு சென்றாலும் செருப்பு அணியாமல் நடந்து செல்ல வேண்டும்.
அவர்கள் உடுத்திக் கொள்ளும் உடைகள் கிழிந்தால் அதனை அவர்களே தைத்துக்கொள்ள வேண்டும். துறவியானவுடன் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் நடத்தி பொதுமக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும். இவர்களுக்கு குடும்பம், உறவுகள் என எதுவும் இருக்கக் கூடாது.
9-ந் தேதி
துறவியாக மாறும் இவர்களுக்கு 9-ந் தேதி அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வருவார்கள். அப்போது அவர்களிடம் இருக்கும் பணம், நகை, சொத்துக்கள் அனைத்தையும் மற்றவர்களுக்கு வழங்கி விடுவார்கள்.
10-ந்் தேதி இருவருக்கும் பரம பூஜ்ய ஆச்சாரிய பகவான் ஸ்ரீ மணிபிரப சூரிஸ்வர்ஜி சாத்வி, ஸ்ரீ சுலோசனா ஸ்ரீஜீ அர்ன் ஆகியோர் சத்தியவாக்கு கொடுத்து, துறவியாக மாறுவார்கள். அவர்களுக்கு முழு விருப்பம் இருந்தால் மட்டுமே துறவியாக முடியும். கடைசி நேரத்தில் கூட துறவியாக விரும்பவில்லை என்றால் விலகி இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம்.
இளம்பெண் சுஷ்மா
துறவறம் செல்லும் இளம்பெண் சுஷ்மா கூறுைகயில், பிறப்பு, இறப்பு, வியாதி, முதுமை இவ்வாறு எண்ணற்ற துன்பங்கள் கொண்டது இந்த உடல். துன்பங்களுக்கு காரணம் பூர்வ ஜென்மங்களில் செய்த வினைகளின் பலன். இன்றைய சூழ்நிலையில் உலகத்தில் சொத்து சண்டை, கணவன், மனைவி சண்டை என்றும், பலவித வியாதிகள், துன்பம் நம்மை சூழ்ந்து உள்ளன.
மனிதன் பிறக்கும்பொழுது ஒரு ரூபாய் கூட கொண்டு வரவில்லை. இறக்கும்பொழுது ஒருரூபாய் சொத்துக்கூட உடன் வராது. ஐம்புலன் ஆசைகள் சிறிது நேரம் தான். அதன்பின் அந்த சுகம் அழிந்து விடுகிறது. சொத்து, சுகம், வீடு, உறவு நிலையானது கிடையாது. இவ்வாறு குருவின் ஞான உபதேசத்தால் அறிந்து, பூர்வ ஜென்ம வினைகள் அழிந்து, பரம அமைதி பரம சாந்த மோட்சம் என்ற நிலையை அடைய துறவறம் மேற்கொள்கிறோம் என்றார்.