பிளஸ்-1 பொதுத்தேர்வை 14,864 பேர் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 14,864 பேர் எழுதினர்
x

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 14,864 பேர் எழுதினர். 1,079 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வேலூர்

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 16,165 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இந்தநிலையில் நேற்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 15,943 மாணவ- மாணவிகள் ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர். ஆனால் தேர்வினை 14,864 பேர் எழுதினர். 1,079 பேர் தேர்வு எழுதவரவில்லை.

இந்த தேர்வுக்காக 81 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. அங்கு மாணவ- மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. 1,200 அறை கண்காணிப்பாளர்கள் இத்தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

70 பறக்கும் படை குழுவினர் அவ்வப்போது திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதுதவிர மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 3 குழுக்களும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையிலான குழுவும் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் ஆலோசனை

பொதுத்தேர்வினை முன்னிட்டு மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் தேர்வு அறைக்கு உள்ளே செல்லும் வரை கைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்தனர். பலர் கோவில்களுக்கு சென்று சாமியை வழிபட்டு தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதும் பொருட்டு அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் சில ஆலோசனைகளும் வழங்கினர்.


Next Story