பிளஸ்-2 பொதுத்தேர்வை 14,923 மாணவ- மாணவிகள் எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,923 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். 540 பேர் தேர்வு எழுதவில்லை.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,923 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 540 பேர் தேர்வு எழுதவில்லை. வாலாஜா ஒன்றியம், வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாணவ -மாணவிகள் தேர்வு எழுதியதையும், மாற்றுத்திறனாளி மாணவ -மாணவிகள் உதவியாளர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதையும் மாவட்ட கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பறக்கும்படை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 63 தேர்வு மையங்களும் போலீஸ் பாதுகாப்புடன் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 7,087 மாணவர்கள், 7,234 மாணவிகள், 602 தனித்தேர்வர்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 923 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 131 தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக 756 ஆசிரியர்களும், நிலையானபடை மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களாக 96 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென சொல்வதை எழுதுபவர் 129 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வெழுதுவதை கண்காணிக்க வருவாய்துறை அலுவலர்கள் பறக்கும் படையினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாவட்ட கல்வித்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா உடனிருந்தார்.
ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி மாணவிகள் உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதினார். இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி கலெக்டர் ஆய்வு
அரக்கோணத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மனூர் கிராமத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என தேர்வு நடைபெறும் மையங்களில் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பார்வையிட்டார்.
அப்போது அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.