விவசாயிகளுக்கு 14-வது தவணை தொகை விரைவில் வழங்கப்படும்
விவசாயிகளுக்கு உதவித்தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு 14-வது தவணை தொகை விரைவில் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு உதவித்தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு 14-வது தவணை தொகை விரைவில் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவித்தொகை திட்டம்
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் (பி.எம். கிசான்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் பற்று வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-வது தவணையாக 1,24,571 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியே 91 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட்டது. இதையடுத்து 13-வது தவணையாக கடந்த பிப்ரவரி மாதம் 1,03,658 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 73 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 12-வது தவணையில் இருந்து 13-வது தவணை பெற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது 20,913 பேருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இவர்கள் தகுதியற்றவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை உரிய தகுதியுடைய நபர்களுக்கு தான் சென்றடைய வேண்டும். ஆனால் பெரிய விவசாயிகள், ஒரே வீட்டில் 2 பேர் உதவித்தொகை பெறுதல், பல்வேறு இடங்களில் நிலம் வைத்துள்ளவர்கள் உதவித்தொகை பெறுதல் போன்று ஏராளமான தகுதியில்லாத நபர்கள் உதவித்தொகை பெற்றுள்ளனர்.
14-வது தவணை...
எனவே அதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை திட்டத்தில் விலக்கு பிரிவுகள் உள்ளன. அதன்படி நிறுவனத்தின் உரிமையாளர்கள், பெரு விவசாயிகள், அரசியலமைப்பில் முக்கிய பதவிகள் வகிப்பவர்கள், ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர பணியாளர்கள், ஊழியர்கள், மாதம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்தியவர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பட்டய கணக்காளர்கள், வல்லுனர்கள் போன்றவர்கள் தகுதியற்றவர்களாகின்றனர். அவ்வாறு அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகுதியுடையவர்களுக்கு விரைவில் 14-வது தவணை தொகை வழங்கப்படும். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விவரங்களும் பதிவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.