மொய் விருந்தில் ரூ.15 கோடி வசூல்
புதுக்கோட்டை அருகே நெடுவாசலில் ஒரே நாளில் 31 பேர் இணைந்து நடத்திய மொய்விருந்தில் ரூ.15 கோடி வசூலானது.
வடகாடு:
களைகட்டிய மொய் விருந்து
புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லையோர கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்புகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் களை இழந்து காணப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லையோர கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் களைகட்ட தொடங்கியது.
ரூ.15 கோடி வசூல்
தற்போது புதுக்கோட்டை மாவட்ட எல்லையோர கிராமங்களில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து பொது இடத்தில் மொய் விருந்து விழா நடத்தினர். இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் ரூ.15 கோடி வரையில் மொய் வசூலானது தெரியவந்துள்ளது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூலாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உற்சாகம்
மேலும் 20-க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா ரூ.50 லட்சம் வரையில் மொய் தொகை வசூல் ஆகி உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். 31 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்தில் ரூ.15 கோடி வசூல் ஆனது இப்பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மொய்விருந்தில் கலந்து கொண்ட கிராமத்தார் முதல் நகரத்தார் வரை ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தனர். இதற்கான வங்கி ஊழியர்கள் தயார் நிலையில் அங்கு இருந்தனர். மேலும் பணம் எண்ணுவதற்கான எந்திரங்களும் அங்கு கொண்டு வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.