வெறி நாய் கடித்து 15 பேர் காயம்
போளூரில் வெறிநாய் பலரை கடித்தது. இதில் காயம் அடைந்த 15 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போளூர்
போளூரில் வெறிநாய் பலரை கடித்தது. இதில் காயம் அடைந்த 15 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறிநாய் கடித்தது
போளூர் நகரில் இன்று காலை சேர்மன் சபாபதி தெருவில் குட்டிகளை ஈன்ற நாய், தன் குட்டிகளுக்கு பாலூட்டி கொண்டு இருந்தது.
அப்போது வேகமாக வந்த வெறி நாய் ஒன்று அங்குள்ள ஒரு குட்டி நாயை கவ்வி பிடித்து ஓடி சென்று, கடித்து குதறி துப்பியது. இதில் அது பரிதாபமாக இறந்தது.
தொடர்ந்து அந்த வெறிநாய், போளூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல தெருக்களில் சுற்றி, சுற்றி வந்து பலரை கடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் போளூர், திருவண்ணாமலை, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதில் காயம் அடைந்த வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த காந்திமதி (வயது 53), மாம்பட்டை சேர்ந்த கண்ணன் (36), அலியாளமங்கலத்தை சேர்ந்த கணபதி (28), போளூரை சேர்ந்த மணி (30), பரமேஸ்வரி (35), விக்னேஷ் (8), லட்சுமி (52), பவுன் குமார் (35), சென்னையை சேர்ந்த விஜயகுமார் (38) உள்ளிட்ட 15 பேர் போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போளூர் பேரூராட்சியினர் மற்றும் பொதுமக்கள் அந்த வெறி நாயை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணைத்தலைவர் எவரெஸ்ட் சாந்தி நடராஜன், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அதிகாரி மலைமாறன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.