நாமக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு தினசரி 15 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது-சங்க நிர்வாகி தகவல்


நாமக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு தினசரி 15 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது-சங்க நிர்வாகி தகவல்
x

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தினசரி 15 லட்சம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நாமக்கல்

4½ கோடி முட்டைகள் உற்பத்தி

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.4½ முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறைவான அளவு முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. இந்த நிலையில் 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த முட்டையின் கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து 430 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு புரட்டாசி மாத விரதம் வருகிற 18-ந் தேதி முதல் தொடங்க இருப்பதால், முட்டை விற்பனை மந்தமாகி இருப்பதே காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்து வந்தனர்.

தினசரி 15 லட்சம் முட்டைகள்

இதற்கிடையே வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் கடந்த 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

பொதுவாக புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் விரதம் கடைபிடிப்பதால், முட்டை நுகர்வு குறையும். அதன் காரணமாக கொள்முதல் விலையும் குறைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 20 நாட்களாக வடமாநிலங்களுக்கு முட்டை வினியோகம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தினசரி 15 லட்சம் முட்டைகள் வீதம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வாய்ப்பு இல்லை

அங்கு நாமக்கல் மண்டலத்தை காட்டிலும் முட்டையின் கொள்முதல் விலை 10 முதல் 15 காசுகள் வரை குறைவாகவே உள்ளது. மேலும் நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானதாக இருப்பதால், அங்குள்ள மக்கள் நமது முட்டைகளை விரும்பி வாங்குகிறார்கள். வடமாநிலங்களுக்கு முட்டை விற்பனை தொடங்கி இருப்பதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story