கூட்டுறவு சங்கத்தில் ரூ.15¾ லட்சம் முறைகேடு
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.15¾ லட்சம் முறைகேடு செய்ததாக கூட்டுறவு சங்க தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.15¾ லட்சம் முறைகேடு செய்ததாக கூட்டுறவு சங்க தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு வங்கி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், பயிர்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் நகை கடன் வழங்குதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பன்னீர்செல்வம் நாகை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
விசாரணையில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆய்மூர் ராமர் மடத்தெருவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன் (வயது 55), எழுத்தர்கள் ஆறுமுகம் (62), இளையராஜா (43), செயலாளர் (பொறுப்பு) அன்புமொழி (43), தற்காலிக பணியாளர் கணேசன் (61) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு சங்கத்தில் ரூ.15¾ லட்சம் முறைகேடு தொடர்பாக தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.