திருவண்ணாமலை நகராட்சியில் 15 கட்டண கழிப்பறைகள் 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்றம்
திருவண்ணாமலை நகரில் 15 இடங்களில் உள்ள கழிவறைகளை 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகரில் 15 இடங்களில் உள்ள கழிவறைகளை 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வைத்தார். ஆணையாளர் முருகேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி நகரில் உள்ள 15 கட்டண கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த வருகிற 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்வது,
திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமர நிழற்குடை அமைத்தல் மற்றும் ஆவின் பாலகம் முன்பு குண்டும் குழியுமான இடத்தினை சமன்படுத்துவது,
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் பராமரிப்பதற்கு தேவையான அனைத்து மின்சாதன பொருட்கள் கொள்முதல் செய்வது, திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள முற்றிலும் பழுதடைந்த மினி பவர் பம்புகளை சரி செய்திட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் புதிய மோட்டார்கள் பொருத்துவது மட்டுமின்றி கால்வாய்களை சீரமைத்து சாலை அமைப்பது உள்ளிட்ட 134 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எரிமேடை
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
திருவண்ணாமலை திருமலை நகரில் தரமற்ற முறையில் கால்வாய் அமைத்ததால் அது சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியில் இருந்து பச்சையம்மன் கோவில் வழியாக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தப் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதுகுறித்து ஆய்வு செய்து விரைந்து சாலை அமைத்து தர வேண்டும். திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் மற்றும் எமலிங்கம் அருகில் உள்ள எரிமேடை மோசமான நிலையில் உள்ளது.அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.
எனவே இது குறித்து ஆய்வு செய்து சாலை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர் என பலர் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை நகரில் 15 இடங்களில் உள்ள கழிவறைகளை 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.