குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 15 சதவீதமாக குறைப்பு


குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 15 சதவீதமாக குறைப்பு
x

குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

2022-23-ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியதுள்ளது. எனவே ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மின் கட்டணம் குறைப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்த அழுத்த மின் இணைப்பு (லோ டென்சன் 3-பி) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story