வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை
திருவிசநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.
பூட்டுக்கு பொருந்தாத சாவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள பெருமாள் கோவில் வடக்கு மடவிளாகத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 90). இவரது மனைவி பட்டம்மாள். கடந்த 4-ந்தேதி ராதாகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று உள்ளார்.
இந்த மாதம் இவரது வீட்டு மின் இணைப்பிற்கு ரீடிங் எடுக்க வேண்டும் என்பதால் ரீடிங் எடுக்கும் நபரிடம் ஒரு சாவியை ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளார். நேற்று மின்சார ரீடிங் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர் தன்னிடம் கொடுத்துள்ள சாவி வீட்டில் உள்ள பூட்டுக்கு பொருந்தவில்லை என ராதாகிருஷ்ணனிடம் போனில் தெரிவித்துள்ளார்.
15 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் தனது மனைவி, மகள் ஆகியோருடன் நேற்று திருவிசநல்லூர் வந்துள்ளார். அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வேறு பூட்டு கிடந்ததை கண்டு ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்ே்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.