வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-ரூ. 50 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-ரூ. 50 ஆயிரம் திருட்டு
கூத்தாநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சாமி கும்பிடும் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி, மரக்கடை, செல்வி நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 59). இவர் கூத்தாநல்லூர் பி.எஸ்.என். எல். தொலை தொடர்பு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்றுமுன் தினம் மாலை 4 மணிக்கு கொரடாச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் நடந்த சாமி கும்பிடும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தனது வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைக்க முயன்றனர். அந்த கதவை உடைக்கமுடிக்கவில்லை.
15 பவுன் நகை-பணம் திருட்டு
இதனால் அவர்கள் முன்பக்கம் உள்ள கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று, வீட்டிற்குள்ளே இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் ஒரு பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு சாமிநாதன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்களால் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து சாமிநாதன் கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. நகை-பணத்தை திருடிய சென்ற மர்ம நபர்களை கூத்தாநல்லூர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.