வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு 'சீல்'


வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

வாடகை நிலுவை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூ.40 கோடி செலுத்தாததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு சிலர் முழு தொகையையும், ஒரு சிலர் பாதித்தொகையையும் செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன. பின்னர் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

15 கடைகளுக்கு 'சீல்'

அத்துடன் அவர்கள் வாடகை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் வாடகையை செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின்பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று இறைச்சி, பேன்சி, மளிகை கடைகள் உள்பட 15 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது.

அப்போது அதிகாரிகளுடன் சில வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்த சென்றனர். சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள், வாடகை செலுத்திய பின்னர் சீல் அகற்றப்படும். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.19 கோடி வசூல்

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் கூறுகையில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இதுவரை ரூ.19 கோடி வசூலாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்கட்டணம் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் பாக்கி உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே, வாடகை நிலுவையை வசூலித்தால் தான் நகராட்சி நிர்வாக பணிகளை தொய்வின்றி செயல்படுத்த முடியும் என்றார்.


Next Story