கல்குவாரியில் பதுக்கிய 15 டன் ரேஷன் அரிசி
கல்குவாரியில் பதுக்கிய 15 டன் ரேஷன் அரிசி, கோட்டாட்சியர் ஆய்வில் சிக்கியது.
ராஜபாளையம்,
கல்குவாரியில் பதுக்கிய 15 டன் ரேஷன் அரிசி, கோட்டாட்சியர் ஆய்வில் சிக்கியது.
கல் குவாரி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் ஆய்வு செய்ய சிவகாசி கோட்டாட்சியர் விசுவநாதன் சென்றார். அப்போது. எதிரே ஒரு வாகனம் வந்தது.
சந்தேகத்தின் பேரில் அவர் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்த போது டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். ேசாதனையிட்டதில் அந்த லாரியில், ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. கல்குவாரியில் இருந்து அந்த அரிசி மூடைகளை எடுத்துச் செல்வதாக டிரைவர் கூறியுள்ளார்.
15 டன் ரேஷன் அரிசி
இதையடுத்து கோட்டாட்சியர் விசுவநாதன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், துணை தாசில்தார் கோதண்டராமன் இணைந்து, போலீசார் உதவியுடன் கல் குவாரியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள குடோனில், ரேஷன் அரிசியை சாக்கு மாற்றி மூடைகளாக கட்டி அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் அரிசி பதுக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 மூடைகள் மற்றும் வாகனத்தில் கடத்தி சென்ற 35 மூடைகள் என 285 மூடைகளில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிலை செய்ய கற்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் வாகனம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கல்குவாரியில் நடத்திய ஆய்வில் முறையான அனுமதியின்றி சிலை செய்வதற்காக பெரிய அளவிலான கற்கள் இரவு நேரத்தில் வெட்டி எடுத்துச்சென்றதும் தெரிய வந்தது.
எனவே அனுமதியின்றி பெரிய அளவிலான கற்களை எடுத்து சென்ற லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கல் குவாரியின் உரிமையாளர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.