குடியாத்தம் அருகே முகாமிட்டுள்ள 15 காட்டு யானைகள்


குடியாத்தம் அருகே முகாமிட்டுள்ள 15 காட்டு யானைகள்
x

ஆந்திர மாநில எல்லையில், குடியாத்தம் அருகே 15 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர்

ஆந்திர மாநில எல்லையில், குடியாத்தம் அருகே 15 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

விவசாய பயிர்கள் சேதம்

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா கிராமம் தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ளது. அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கு ஏராளமான யானைகள் உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக கவுண்டன்யா யானைகள் சரணாலயத்தில் இருந்து யானைகள் கூட்டம் குடியாத்தம் வனப்பகுதியையொட்டி உள்ள சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி, குடிமிபட்டி, கொட்டமிட்டா, கொல்லப்பல்லி, சூராளூர், பரதராமி, கொத்தூர், டி.பி.பாளையம், வீரசெட்டிபல்லி காப்புக்காடுகள், கதிர்குளம், கல்லப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களுக்குள் புகுந்து மா மரங்களையும், நெற்பயிர்கள், வாழை, கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

15 காட்டு யானைகள்

கடந்த பல மாதங்களாக யானைகள் கூட்டம் ஆந்திர மாநிலத்தில் அடர்ந்த வனப் பகுதிக்குள் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இரண்டு யானைகள் மட்டும் அவ்வப்போது குடியாத்தம் வனப் பகுதிக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இந்தநிலையில் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே தமிழக எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில பகுதியில் 15 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றுள்ளது. இதனால் குடியாத்தம்- பலமநேர் சாலையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் நின்று ஒலி எழுப்பி யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பின்னரே சென்றுள்ளனர்.

விவசாயிகள் அச்சம்

குறிப்பாக முசலமடுகு காலவபல்லி பகுதியில் நெடுஞ்சாலையை யானைகள் கூட்டம் கடந்து சென்று, வருகிறது. தமிழக வனப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த யானைகள் முகாமிட்டு இருப்பதால் ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள தமிழக கிராமங்களான சைனகுண்டா, மோர்தானா கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், யானைகள் கூட்டம் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை தமிழக வனப்பகுதிக்குள் வராதவாறு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story